Saturday, 12 September 2015

SAHABAT RAKYAT (மக்களின் நண்பரின்) 14-வது ஆண்டு நிறைவுக்கான நினைவு கூட்டத்தில் ரவி சர்மா ஆற்றும் உரை / ரவி சர்மாவி பெற்றோர்கள் பற்றி அவர் தந்த சுருக்கமான விவரங்கள்

SAHABAT RAKYAT (மக்களின் நண்பரின்) 14-வது ஆண்டு நிறைவுக்கான நினைவு கூட்டத்தில் ரவி சர்மா ஆற்றும் உரை

(செப்டம்பர் 06, 2015)


அன்புமிக்க கருத்துக்கள தயாரிப்புக் கமிட்டியின் தலைவரே,

இயக்கங்களின் தலைவர்களே, நண்பர்களே, சகோதரர்களே, எல்லாருக்கும் என் வணக்கம்!

இன்றைய கருத்துக்களம் மிக காரசாரமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டம். இதில் கலந்துகொள்ள முடிந்தது என் அதிருஷ்டம். முதன்முதலில் நான் மக்களின் நண்பரில் (SAHBAT RAKYAT) இருக்கும் நண்பர்களுக்கு என் இதயபூர்மான நன்றி தெரிவிக்கிறேன்! அவர்கள் விடுத்த ஆர்வமிகுந்த அழைப்பினால் தான் மக்களின் நண்பர் நிறுவப்பட்ட 14-வது ஆண்டு நிறைவின் கருக்களத்திலும் விருந்திலும் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. மக்களின் நண்பருடைய 14-வது ஆண்டு நிறைவுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் வணக்கமும்!

நான் சிங்கை நாட்டின் குடிமகன். ஆனாலும் மலேசிய மக்களுடைய நிலைமையிலும் நாட்டின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறேன். மக்களின் நண்பரில் வேலை செய்யும் இளம் தலைமுறையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவர்களுக்கு உன்னத குறிக்கோள் உண்டு; நடவடிக்கையில் இறங்கும் தைரியமும் இருக்கிறது. பல்வேறு இனங்களிடை சமத்துவத்தை நிறைவேற்றி நீதியான சமுதாயத்தை உருவாக்குவதற்கு கடினமான முயற்சி எடுக்கும் ஹிண்ட்ராபின் சகோதரர்களுக்கும் மற்ற அமைப்புகளின் நண்பர்களுக்கும் என் உயர்ந்த மதிப்புத் தெரிவிக்கிறேன். இளைஞர்கள் காலை எட்டு-ஒன்பது மணியிலான சூரியனை போல இருக்கின்றனர். அவர்கள் தான் மலேசியா-சிங்கப்பூர் இரு நாடுகளுக்கும் ஒளிமயமான வருங்காலம் கொண்டு வருவதற்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர்.

திரு ஞம் கீ ஹான் மக்கள் நண்பரின் இணையத்தள புலோக்கில் எழுதிய மலேசிய இந்திய இன மக்களின் வாழ்க்கை, போராட்டம் ஆகியவை பற்றிய சீன மொழி கட்டுரையை ஒரு நண்பர் எனக்கு அனுப்பினார். இதில் திரு ஞம் காட்டிய நீதி உணர்வு என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. காரணம் எனக்கு தெரிந்த வரை, இந்திய உழைப்பாளி வர்க்கம் மற்றும் பொதுமக்களின் துன்பதுயரங்களை பற்றி இந்தியர் அல்லாத பிரமுகர்களோ அமைப்புகளோ இவ்வளவு ஆழமாக ஆராய்ந்து பார்த்து விளக்கியதில்லை. திரு ஞம் கீ ஹான் செய்த வேலை உண்மையில் அரிதானது. ஆகவே ஹிண்ட்ராபின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையிலுள்ள “மலேசியாவில் ஹிண்ட்ராப் இயக்கத்தின் எழுச்சியும் திசையும்” என்ற 5-வது அத்தியாயத்தை தமிழுக்கு மொழிப்பெயர்க்க என் நண்பர் கேட்ட போது, நான் ஏற்றுக்கொண்டேன்.

40 ஆண்டுகளுக்கு முன், நான் சீனம்-தமிழ் மொழிப்பெயர்ப்பு வேலையில் ஈடுபட்டேன். ஆயினும் கடந்த 20க்கு மேலான ஆண்டுகளாக நான் மொழிப்பெயர்ப்பு வேலை செய்யவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுடைய தமிழ் மொழி இதே காலத்தில் புதிய வளர்ச்சி கண்டு பல மாற்றங்களையும் அறிமுகம் செய்துள்ளது. நானோ அதனுடன் அதிக தொடர்பு வைக்கவில்லை. நான் தமிழ் மொழியை வாழ்க்கையில் உபயோகிப்பதை தவிர, வேலையில் அடிக்கடி உபயோகிக்கவில்லை. முன்பு மொழிப்பெயர்ப்பு வேலை செய்த போது, நான் ஏராளம் சீனம்-தமிழ் மொழி சொற்தொடர்களை சேகரித்தேன். ஆனால் இவையெல்லாம் காணாமல் போய்விட்டன. இச்சமயத்தில் திரு ஞம் கீ ஹானின் கட்டுரையை மொழிப்பெயர்ப்பது எளிதான வேலையல்ல என்பதை எதிர்பார்க்க முடியும். எனக்கு ஞாபகத்திலிருந்து தான் சொற்களை தோண்டி எடுத்து மொழிப்பெயர்க்க வேண்டியிருந்தது. தமிழ்-ஆங்கில அகராதியிலிருந்து தகுந்த சொற்களை தேடுவதும் கஷ்டம். கூகல் மொழிப்பெயர்ப்பு இணையத்தளம் ரொம்ப அற்புதமானது. சீன மொழி சொற்களை அல்லது வாக்கியத்தை அதில் தட்டச்சு செய்ததும் தமிழில் அதை பார்க்க முடியும். ஆனால் அது காட்டும் தமிழ் வாக்கியத்தை நேரடியாக உபயோகிக்க முடியாது, மட்டுமல்ல அந்த மொழிப்பெயர்ப்பு விசித்திரமாகவும் இருக்கிறது. அது ஒரு யோசனைக்கு மட்டும் தான் உதவியாக இருக்கும்.

விவரங்கள், கருவிகள் போதாததினால் எனது மொழிப்பெயர்ப்பு மிகவும் மெதுவாக நடந்தது. எனக்கு நேரத்தையும் சக்தியையும் ஒன்றுகூட்டவும் முடியவில்லை. திரு ஞம் கீ ஹானின் கட்டுரையிலுள்ள “தொகுப்புரை” என்ற கடைசி பாகமும் முக்கியம் என்று கருதி இதையும் தமிழுக்கு மொழிப்பெயர்த்தேன். இதன் விளைவாக இம்மொழிப்பெயர்ப்பை செய்து முடிக்க நான் பல மாதங்கள் செலவழித்தேன். இதற்காக நான் திரு ஞம் கீ ஹானிடமும் மற்ற நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

எனது மொழிப்பெயர்ப்பில் பல பிழைகள் இருப்பது தவிர்க்கப்பட முடியாது. நம் இந்திய சகோதரர்கள் இதை வாசிக்கும் போது புரியுமா என்பதும் என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழ் ஆசிரியர்களான மோகன் பெரியசாமி, சாந்தலட்சுமி பெருமாள் இருவருக்கும் நான் ஆழ்ந்த நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் தான் எனது மொழிப்பெயர்ப்பின் கையெழுத்துக்களை மின்னியல் வடிவத்தில் கணினியில் தட்டச்சு செய்தனர்; மொழிப்பெயர்ப்புக்கு மிக நல்ல ஆலோசனைகளும் தந்தனர். தமிழ் மொழியின் புதிய வளர்ச்சிக்கும் மக்களின் வாசிக்கும் பழக்கத்துக்கும் தகுந்தாற்போல் இந்த மொழிப்பெயர்ப்பை திருத்தி மேம்படுத்த நான் அவர்களையும் மற்ற அறிஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

மலேசியா ஒரு அழகான செழுமையான நாடு. எல்லா இன மக்களும் இந்நாட்டில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியிருந்தது. நாம் மலாயன்/சிங்கப்பூரியன் என்று சிறுவயதிலிருந்தே என் தந்தை எமக்கு போதனை அளித்தார். என்னை பாதி மலேசியர் என்று கூறுவதும் மிகையாகாது, ஏனென்றால் என் மனைவி சிரம்பானை சேர்ந்தவர். சிங்கப்பூர்-மலேசியா இணைப்புப் பாலங்களின் இரு பக்கங்களிலும் ஏற்படும் எல்லா சம்பவங்களும் அங்கு வாழும் எல்லா இன மக்களுடனும் நெருங்கிய தொடர்புடையவை. எந்தச் சீரழிந்து போகும் விஷயமும் புதுமையின் வளர்ச்சியை தடுக்க முடியாது.

மக்களின் நண்பர் (SAHABAT RAKYAT) வருங்காலத்தில் தொடர்ந்து வளர்ந்து, மக்களின் முற்போக்கு இலட்சியத்துக்கும் எல்லா இன மக்களுக்குமிடையிலான மாபெரும் ஒற்றுமைக்கும் மேலும் பெரிய சாதனை வழங்க நான் வாழ்த்துகிறேன். எல்லா நண்பர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்!

நன்றி, வணக்கம்
ரவி சர்மா


ரவி சர்மாவி பெற்றோர்கள் பற்றி அவர் தந்த சுருக்கமான விவரங்கள்

“சஹாபாட் ரக்யாட்” (மக்களின் நண்பரின்) ஆசிரியர் விளக்கக்குறிப்பு:

திரு ஞம் கீ ஹான் சீன மொழியில் எழுதிய “ஹிண்ட்ராப் இயக்கமானது, மலேசிய இந்திய சமூகத்தின் தற்போதைய ஜனநாயக செயற்பாட்டின் விளைவே” எனும் ஆய்வுக் கட்டுரையின் கடைசி 2 பகுதிகளை “மக்களின் நண்பருடைய” வேண்டுகோளுக்கு இணங்கி தமிழில் மொழி பெயர்த்த போது ரவி சர்மா காட்டிய ஆர்வம்; “மக்களின் நண்பரின்” 14-வது ஆண்டு நிறைவு நிகழில் அவர் ஆற்றிய உரையில், ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் போராடும் இளம் தலைமுறை மீது அவர் காட்டிய அக்கறை, ஆதரவு ஆகியவை அவரது சொந்த அனுபவங்களுடனும் சிங்கப்பூர்-மலாயா மக்களின் தேசிய ஜனநாயக போராட்டத்துக்காக அவரது பெற்றோர்கள் தங்கள் முழுவாழ்வையும் அர்ப்பணித்த வரலாற்றுடனும் தொடர்புடையவை.

61 வயதான ரவி சர்மா கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஒரு புரட்சி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜனநாயக பிரமுகர். இந்தக் குடும்பம் சிங்கப்பூர் உட்பட மலாயாவின் காலனித்துவ எதிர்ப்பு ஜனநாயக போராட்டத்துக்காக விடாமுயற்சி எடுத்தது. ரவியின் தந்தையார் மலாயா ஜனநாயக ஒன்றியம், சிங்கப்பூர் மக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு லீக், மற்றும் மலாயா தேசிய விடுதலை லீக் ஆகியவற்றில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். சிறு வயதிலிருந்தே ரவி பெற்றோர்களுடன் சீனாவில் வாழ்ந்து வந்ததினால் சீன மொழியிலே கல்வி பெற்றார். ஆகவே சீன மொழியில் அவரது திறன் சிங்கப்பூர்-மலேசியாவின் பல சீன வம்சாவளியினரை விட நன்றாக இருக்கிறது. அவர் பெய் ஜிங் பாணியில் சரளமாக சீன மொழி பேசுவார்.

ரவிக்கும் அவரது மனைவியாருக்கும் 18 வயதான புதல்வியும் 12 வயதான புதல்வனும் இருக்கின்றனர். சிங்கப்பூரில் குடியிருக்கும் அவர் அடிக்கடி சீனாவுக்கு பயணம் செய்து, வாணிகம் செய்து வருகிறார். அவரை பற்றி மேலும் அறிய “ஹிண்ட்ராப் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும்” எனும் தலைப்பிலான ஆசிரியர் குறிப்பில் “மொழிப்பெயர்ப்பாளர்” என்ற பகுதியை வாசிக்கலாம்.

பி வி சர்மா அவர்கள் 1947-ல் சிங்கப்பூரில் எடுத்த புகைப்படம்
ரவி சர்மாவின் குடும்பப் பின்னணியை, குறிப்பாக அவரது தந்தையார் பி வி சர்மா (இடதுபக்கத்தின் படத்தில் காணப்படுகிறார்), அவரது தாயார் சாரதா சர்மா இருவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஜனநாயகம், மனித உரிமைகளுக்காக வேலை செய்யும் இளம் தொண்டர்களுக்கு எடுத்துக்கூறுவதற்கு “மக்களின் நண்பர்” சிங்கப்பூரில் பணிபுரியும் சீனப்பாரம்பரிய மருத்துவரான சிங் மின் ஒவை ரவியை பேட்டிக்காண அனுப்பியது. அவர் ரவியிடமிருந்து அவரது பெற்றோர்களின் வரலாறு பற்றிய சில விவரங்களையும் அரிய புகைப்படங்களையும் பெற்றார். ரவி தந்த சுருக்கமான விளக்கம் கீழ் வருமாறு:

என் தந்தையார் பி வி சர்மா 1916-ல் பிறந்தவர். ஒரு வயதாகிய பின் என் தாத்தாவும் பாட்டியும் அவரை இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர் சிங்கப்பூரிலேயே வளர்ந்து கல்வி பெற்று, இராய்ஃபிள்ஸ் கல்லூரியில் (RAFFLES COLLEGE) பயின்று 1939-ல் பட்டதாரி ஆனார். பிறகு அவர் மலாயாவின் பேராக்கிலுள்ள கிரியன் மாவட்ட ஆங்கில பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராக வேலை செய்தார். என் தாத்தா சிங்கப்பூரின் காத்தோங்கில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் நடத்தினார், அதில் தொடக்க நிலை முதல் உயர் நிலை வரையான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. 60-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அரசாங்கம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டது வரை, என் தாத்தா கல்விக்கற்பிக்கும் வேலையிலேயே ஈடுபட்டார்.

1946, அக்டோபரில் பி வி சர்மா அவரது நெருங்கிய நண்பரான ஜோன் ஈபருடன் (JOHN EBER) சேர்ந்து சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்தையும் (STU) மலாயா ஃபெடரேஷன் ஆசிரியர் சங்கத்தையும் தொடக்கி வைத்தார். அவர் சங்கத்தின் முதலாவது தலைமை செயலாளராகி, பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ல் பி வி சர்மா சிங்கப்பூரில் இருந்த மலாயா ஜனநாயக ஒன்றியத்தின் தலைமையகத்துக்கு முன்னால் எடுத்த படம்
இக்காலத்தில் அவர் 2-வது உலக யுத்தத்துக்குப் பின் சிங்கப்பூரின் முதலாவது அரசியல் கட்சியான மலாயா ஜனநாயக ஒன்றியத்தை தொடக்கி வைப்பதில் ஈடுபட்டு, அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் ஆனார். அகில மலாயா கூட்டு நடவடிக்கை கமிட்டியில் சிங்கப்பூர் ஆசிரியர் சங்கம் ஒரு உறுப்பு அமைப்பாக இருந்தது. 1948-ல் அவசரக் காலம் அறிவிக்கப்பட்ட பின் அவர் தலைமறைவாகி, 1951-ல் கைதுசெய்யப்பட்டது வரை, சிங்கப்பூர் மக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு லீக்கின் நடவடிக்கைகள் நடத்தினார்.

சிறையில் பிரிட்டிஷ் காலனிஸ வாதிகள் அவரை மிருகத்தனமாக அடித்து அவருடைய உடலில் பல உட்காயங்கள் ஏற்படுத்தினர். சயின்ட் ஜோன் தீவில் இரண்டு ஆண்டுகள் தனிமையாக அடைத்து வைத்த பின் அவர் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். இந்தியாவுக்கு வந்த பின், இந்தியா-சீனா நட்புறவு சங்கத்தில் அவர் ஆர்வத்துடன் பங்குபற்றி, இரு நாடுகளின் மக்களுக்கிடை நல்லுறவை உந்தித்தள்ள முயற்சி எடுத்தார். அங்கு அவர் மலாயாவின் தேசிய விடுதலை போராட்டத்துக்கு ஆதரவளித்து “மலாயன் பூமி” எனும் ஆங்கில மொழி சஞ்சிகையை பிரசுரித்தார்.

அச்சமயத்தில் சீனாவின் பிரதமராக இருந்த சௌ என் லாய் அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்டு என் தந்தையார் முழு குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு 1959-ல் பல நாடுகளின் வழியாக சீனாவின் பெய் ஜிங்கை அடைந்தார். 1966-ம் ஆண்டு வரை அவர் பெய் ஜிங் இரேடியோ கல்லூரியில் ஆங்கில மொழி விரிவுரையாளராகவும் சின்வா செய்தி நிறுவனத்தில் ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1965-1969 வரை அவர் பெய் ஜிங்கூக்கான மலாயா தேசிய விடுதலை லீக் அலுவலகத்தின் தலைவராக இருந்தார். பிறகு 1991-ல் சிங்கப்பூருக்கு திரும்பும் வரை அவர் சீனாவின் தென் பகுதியில் வேலை செய்தார். 1994 மார்ச் 9 ந்தேதி அவர் சிங்கப்பூரில் காலமானார். சிங்கப்பூர் ஆசிரியர் சங்கம் எனும் STU, அவர் சிங்கப்பூருக்கு விட்டுச்சென்ற சொத்து. ஆசிரியர் சங்கத்தினதும் ஆசிரியர்கள்-தொழிலாளர்களினதும் உரிமைகளுக்காக அவர் வழங்கிய சாதனைகள் சமுதாயத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன.

1965, அக்டோபர் 1 ந்தேதி சீன அரசாங்கத்தின் அழைப்பில் பி வி சர்மாவும் அவரின் மனைவியார் சாரதா சர்மாவும் பெய் ஜிங்கின் தியென் ஆன் மனில் சீனாவின் தேசிய தின பெரும் அணிவகுப்பை பார்வையிட்டனர்
என் தாயார் சாரதா சர்மா 1927-ம் ஆண்டில் இந்தியாவின் கேரளா மாகாணத்தின் ஒரு கிராமப்புற ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். அவர் இந்தியாவில் பிரசித்திப்பெற்ற அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்றவர். 1953-ல் அவர் என் தந்தையாரை திருமணம் செய்துகொண்டார். சீனாவை அடைந்த பின் அவர் பெய் ஜிங் இரேடியோ கல்லூரியில் தமிழ் மொழி பிரிவை தொடக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு, சீனாவில் தமிழ் மொழிப் படிப்புத்துறையை தோற்றுவித்தார். அவர் சீனாவுக்கு பல தமிழ் மொழி அறிஞர்களை பயிற்றி, 1964-ல் சீனாவின் சர்வதேசிய வானொலியின் (CRI) தமிழ் ஒலிபரப்பை ஆரம்பிக்க அஸ்திவாரமிட்டார். இன்றைக்கும் இந்தத் தமிழ் ஒலிபரப்புகள் தொடருகின்றன. அவரின் சீன மாணவர்களில் தமிழ் மொழி பேராசிரியர் எனும் பட்டம் பெற்றவரும் இருந்தார். அவர்கள் சீனா, இந்தியா இரு நாடுகளுக்கிடை கலாச்சார பரிமாற்றத்துக்காக நற்பணிகள் ஆற்றினார்கள்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீன அரசாங்கம் ஆகியவையும் சீன நண்பர்களும் என் பெற்றோர்களுக்கு மதிப்புக்கொடுத்து, அவர்கள் மீது அக்கறை காட்டியுள்ளனர். தாயார் என்னுடன் வாழ்கிறார். 88 வயதாகியும் அவர் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் அரசியல், பொருளாதார வளர்ச்சியில், குறிப்பாக இந்திய சமூகத்தின் வாழ்க்கை நிலையில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.

2015, ஆகஸ்ட் 28 ந்தேதி 61 வயதான ரவி சர்மா அவரது 88 வயதான தாயாருடன் வீட்டில் எடுத்த படம்

0 comments:

通告 Notification
Malaysia Time (GMT+8)